கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை அருகே இருக்கும் மலைக்கிராம மக்கள் சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்களை நாடும் அரசியல் கட்சியினரைக் கண்டிக்கும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக மலைக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அமைந்திருக்கும் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு செல்ல வேண்டுமெனில் தொழுவபெட்ட வழியாக அதற்கு இடையில் இருக்கும் குள்ளபட்டி, கவுனூர், டி.பழையூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை கடந்து தான் செல்ல வேண்டும்.
துளியளவும் சாலைவசதி இல்லாத இத்தகைய கிராமங்களைக் கடந்து செல்வதே அப்பகுதி மக்களுக்குச் சவால் மிகுந்த காரியமாக அமைந்துள்ளது. சாலை மட்டுமல்ல குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் இப்பகுதி மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
தொளுவபெட்டாவைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் மட்டும் சுமார் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைவசதியும், பேருந்து வசதியும் இல்லாத காரணத்தினால் சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழலுக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில், அதிகளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது
ஒவ்வொரு தேர்தலின் போது மட்டுமே தங்களின் பகுதிக்கு வரும் அரசியல் கட்சியினர், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என வாக்குறுதி கொடுப்பதும், தேர்தல் முடிவடைந்த பின்பு இப்பகுதிக்கே வராமல் ஏமாற்றுவதுமே தொடர்கதையாகி வருகிறது. பலமுறை வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்களால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போவதாக மலைக்கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.
மலைக்கிராம மக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமை என்பதை உணர்ந்து உடனடியாக சாலைவசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.