கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதமானதால் கோபமடைந்த நபர், சவக்கிடங்குக்குள் வைக்கப்பட்டிருந்த தனது தாயின் சடலத்தை காரில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த தேவி என்ற மூதாட்டி உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து மூதாட்டியின் உடல் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட நேரமாகியும் மூதாட்டியின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல, மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் மகன் சவக்கிடங்குக்குள் சென்று, தனது தாயின் உடலை எடுத்துக்கொண்டு காரில் வைத்து புறப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மூதாட்டியின் உடலுடன் சென்ற நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
அப்போது காலதாமதத்தால் ஏற்பட்ட கோபத்தால் தாயின் சடலத்தை எடுத்துச் செல்வதாக அந்நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை எச்சரித்த போலீசார் தாயின் சடலத்தை கொடுத்தனுப்பினர். இதனிடையே மூதாட்டியின் சடலத்துடன் கார் மருத்துவமனையில் இருந்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.