கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்தில் 50 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமசெட்டிபாளையம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்தார். அவர் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர், பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை யாரோ கொலை செய்யத் துரத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் பணியிலிருந்த காவலர், அவர் மனநலம் பாதித்தவர்போல் பேசுவதாகக் கூறி வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல் நிலையத்தின் மேல் தளத்திற்குச் சென்ற ராஜன், உதவி ஆய்வாளர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜன் காவல் நிலையத்தை நோக்கி ஓடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாகப் பேட்டியளித்த கோவை காவல் ஆணையர், தற்கொலை செய்து கொண்ட நபர், மன அழுத்தத்திலிருந்ததாக தெரிவித்தார்.
அதேபோல் காவல் நிலையத்தில் நடந்தது தற்கொலை தான், லாக்கப் டெத் கிடையாது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் காவல் நிலையத்தில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இருவரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்தும் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.