அடிப்படை வசதிகளின்மை மற்றும் பாதுகாப்பு அச்சத்தால் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருமே புலம்பெயரும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அந்த கிராமம் எங்கு உள்ளது ? மக்கள் அனைவரும் வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஆள் நடமாட்டமே இல்லாத அளவிற்குக் காட்சியளிக்கும் இந்த நாட்டாகுடி கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக 50க்கும் அதிகமான குடும்பங்களும் 200க்கும் அதிகமான மக்களும் வசித்து வந்துள்ளனர். காலப்போக்கில் அடிப்படை வசதிகள் காரணத்தினாலும், தொழில் சார்ந்தும் பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராகக் கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அதோடு, இப்பகுதியில் அடுத்தடுத்து அரங்கேற்கும் படுகொலைச் சம்பவங்களும் பொதுமக்கள் வெளியேற முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது
பள்ளி, மருத்துவமனை, பேருந்து வசதி எனப் பொதுமக்களுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்பதோடு, குடிநீர் விநியோகம் கூட முறையாக இல்லை என்பதால் 50 குடும்பங்கள் வசித்து வந்த நாட்டாகுடியில் தற்போது நான்கு பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 4 ஆயிரத்து 835 கோடிக்கும் மேல் தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்த வசதியை ஏற்படுத்தித் தராத தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலையின் விமர்சனத்தையடுத்து அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊரக வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரடியாக நாட்டாகுடி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்க்கான இணைப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அதற்கான குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அதிகாரிகளின் உத்தரவின்படி உடனடியாக அனைத்து குழாய்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதோடு இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றத்திற்குப் பயமும், தொழிலுமே காரணம் எனவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
200க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வந்த ஊரில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரத்தவறிய மாவட்ட நிர்வாகத்தால் ஒரு கிராமமே புலம்பெயரும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. சிவகங்கை மட்டுமல்ல தமிழகத்தில் இன்னும் அடிப்படை வசதிகளின்றி இருக்கும் கிராமங்களுக்கு இனியாவது அவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.