மதுரை அருகே சேதமடைந்த குடியிருப்புகளுக்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய குடியிருப்புகள் கட்டித்தருகிறோம் என்ற அரசு அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி குடியிருப்பை விட்டு வெளியேறிய நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் கிழக்கு தாலுக்காவிற்கு உட்பட்ட சக்கிமங்கலம் பகுதியில் சுமார் 350 நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகக் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு கட்டிக் கொடுத்த கான்கிரீட் தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் தார்ப்பாயைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.
குறிப்பிட்ட 71 வீடுகளும் மக்கள் வசிக்கத் தகுதியற்ற நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை விட்டு வெளியேறினால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை நம்பி சமுதாயக்கூடத்தில் குடி பெயர்ந்த மக்களுக்கு பத்து மாதங்கள் கடந்தும் எந்தவித உதவியும் செய்து தரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது
ஊர் ஊராகச் சென்று நாடோடியாக வாழ்ந்து வந்த நரிக்குறவர்கள் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளைப் பயன்படுத்தி நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்கி ஊசி மணி பாசிகளை விற்று தொழில் செய்து வந்தனர். அவர்களுக்கான குடியிருப்பைப் புதுப்பிப்பதற்கான எந்தவித பணிகளும் நடைபெறாத காரணத்தினால் சமுதாயக்கூடங்களிலும், மரத்தடிகளிலும் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்
சேதமடைந்த வீட்டிற்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரங்களில் மட்டுமே தங்களை நாடி வரும் அரசியல் வாதிகள், தாங்கள் துயரப்படும் நேரங்களிலும் வந்து பார்க்க வேண்டும் என நரிக்குறவ சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.