ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் அங்குத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அரசு முறை உயர்மட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து விவாதிக்க டோவல் மூத்த ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பின் கூடுதலாக ரஷ்யாவிடம் இருந்து S-400 பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்காக இந்தியா முடிவெடுத்துள்ளது. மேலும், ரஷ்ய Su-57 போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் உட்பட பல்வேறு வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கும் இந்தியா மீதான வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த இந்தியா, ரஷ்ய எண்ணெய்யை வாங்குவது நாட்டின் தேவை என்று கூறியதோடு, இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்று ஆதாரத்துடன் கூறியுள்ளது. மேலும், உலகச் சந்தையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ரஷ்யாவுடனான இந்திய உறவு பாரம்பரியம் மிக்கதாக விளங்குகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தூதர் ரஷ்யாவுக்குத் தான் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, கச்சா எண்ணெய் வர்த்தகத்தை விடவும் ஆழமாக உள்ளது.
1965ம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரின்போது, அப்போது சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா மத்தியஸ்தம் செய்தது. தொடர்ந்து, அதற்கு அடுத்த ஆண்டு, தாஷ்கண்ட்டில் உச்சி மாநாட்டில் இந்தியா- பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தம் ஏற்படவும் உதவியது.
1971 ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரின் போது, இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நின்றது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் ,சோவியத் யூனியனுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வளர தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு தனது முதல் அணு ஆயுத சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியபோதும் , சோவியத் யூனியன் இந்தியாவுடனான உறவைத் துண்டிக்க வில்லை.
பனிப்போருக்குப் பின்னும் இந்திய- ரஷ்ய உறவுகள் வலிமை பெற்றன. 1990களின் முற்பகுதியில், இந்திய இராணுவ ஆயுதங்களில் சுமார் 70 சதவீதமும், விமானப்படையில் 80 சதவீதமும், கடற்படையில் 85 சதவீதமும் சோவியத் நாட்டு ஆயுதங்களே இருந்தன. இப்போது மொத்த ஆயுத கொள்முதலில் ரஷ்யாவின் பங்கு 36 சதவீதமாகும்.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 40 சதவீதமாகும். இது நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் இரண்டு சதவீதமாக இருந்தது. இரு நாடுகளும் அணுசக்தித் துறையிலும் ஒத்துழைக்கின்றன. குறிப்பாக, ரஷ்ய அரசு இந்தியாவில் ஆறு அணுசக்தி உலைகளை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Chennai-Vladivostok maritime corridor மற்றும் International North-South Transport Corridor என்ற வர்த்தகத்துக்கான வழித்தடத்தை இருநாடுகளும் செயல்படுத்தி வருகிறது. மேலும், இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்க இருநாடுகளும் இலக்கு வைத்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர் சூழலிலும், இந்தியா ரஷ்யாவுடனான தனது உறவுகளைப் பேணி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ரஷ்யாவுக்கான மின்-விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்ல இந்தியர்களுக்கு அனுமதி கொடுப்பது பற்றியும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி- அதிபர் புதின் சந்திப்புக்குப் பிறகு,இருநாடுகளுக்குமான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதால், இந்தியா மீது கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியா,ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது என்றும், ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அமெரிக்காவுக்குக் கவலையில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, அவர், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ரஷ்யா செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நிலையான உறவை, இந்தியா- ரஷ்யா ஆகிய நாடுகள் பேணி வருகின்றன. உலக அரசியலில் இது ஒரு மாபெரும் சாதனை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.