முப்படைகளை நவீனப் படுத்துவதற்காக, பாதுகாப்புத் துறைக்கு 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில், 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
பாதுகாப்புக் கொள்கை மற்றும் மூலதனக் கொள்முதல் குறித்து முடிவெடுக்கும் மிக உயர்ந்த அமைப்பாகப் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் செயல்படுகிறது. தேவையை ஏற்றுக்கொள்வதற்கான ஒப்புதல், கொள்முதல் செயல்முறையின் முதல் படியாகும்
87 புதிய கனரக ஆயுதமேந்திய ட்ரோன்கள் மற்றும் 110 க்கும் மேற்பட்ட வான்வழி பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்ட மற்றும் ஆயுதம் ஏந்திச் செல்லக் கூடிய 87 ட்ரோன்கள் கொள்முதலுக்காக சுமார் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மேலும், மற்றொரு நிறுவனத்துக்காகப் பாதுகாப்பு உதிரிப் பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் உற்பத்தியாளர் பிரிவில், சுமார் 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. 10,800 கோடி ரூபாய் மதிப்பில் 110க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளும் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. கூடுதலாக, 650 கோடி ரூபாய்க்கு எட்டு பிரம்மோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் உற்பத்திக்கும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளன.
BMP கவச வாகனங்களுக்கான தெர்மல் இமேஜர் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெர்மல் இமேஜர் இரவு மற்றும் மோசமான வானிலையில் கூட வாகனத்தை இயக்க அனுமதிக்கும் ஒரு அதிநவீன கருவியாகும். இது கவச வாகனங்களின் இரவு நேர ஓட்டுநர் திறனை மேம்படுத்தும் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைக்கு அதிக இயக்கம் மற்றும் செயல்பாட்டு நன்மையை வழங்கும் என்று கூறப் பட்டுள்ளது.
முப்படைகளுக்கும் நடுத்தர உயர நீண்ட தாங்கு திறன் கொண்டRemotely Piloted Aircraft கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. மலை ரேடார்கள் கொள்முதல் செய்வதற்கும் SAKSHAM/SPYDER ஆயுத அமைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய விமானப்படை ஒப்புதல் பெற்றுள்ளது.
ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட SAKSHAM/SPYDER அமைப்பு, நாட்டின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் கடற்படைக்காக, பிரம்மோஸ் தீயணைப்பு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஏவுகணைகள் வாங்குவதற்கும், BARAK-1 பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை மேம்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
இது நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியக் கடற்படைக்கு மேம்பட்ட நவீனத்தினை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, C-17 மற்றும் C-130J கடற்படைகளின் பராமரிப்பு மற்றும் S-400 நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் விரிவான பராமரிப்பு ஒப்பந்தத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்முதல்கள் வான் பாதுகாப்பு, சிறந்த விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு கொள்முதல்களால் பாதுகாப்புத் துறை பங்குகளில் ஏற்றத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.