கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை நாடும் நிலையை ஏற்படுத்தினால், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம், பாப்பம்பட்டியில் உள்ள வீரமாத்தி அம்மன் கோயிலில், ஆடிப்பெருவிழா நடத்த அனுமதி கோரி ஜூலை 7-ம் தேதி சூலூர் காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக காவல்துறை சார்பில் அந்த விண்ணப்பம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தகுந்த நிபந்தனைகளுடன் திருவிழாவிற்கு அனுமதி வழங்க சூலூர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
எதிர்காலத்தில் கோயில் திருவிழாக்கள் தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, காவல்துறை 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,
விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் கடைசி நேரத்தில் நீதிமன்றங்களை நாடச்செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது மாவட்ட எஸ்.பி துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தார்.
மேலும், காவல் துறையினர் விண்ணப்பங்களை உரிய நேரத்தில் பரிசீலிக்காததால், திருவிழா வசூல் தொகையை வழக்குகளுக்கு செலவு செய்ய நேரிடுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி,வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் திருவிழா செலவுகளை சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஏற்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.