11 ஆண்டுகளுக்கு முன்பு 239 பயணிகளுடன் மர்மமான முறையில் மாயமான மலேசிய விமானம் கருந்துளையில் சிக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். அதற்கு அவர்கள் பல்வேறு யூகங்களைத் தெரிவிக்கின்றனர். அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி, அன்றைய தினம் மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370 என்ற விமானம் புறப்படத் தயாராக இருந்தது. கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் செல்வதுதான் அதன் பயணத் திட்டம். அந்த விமானத்தில் 239 பயணிகள் இருந்தனர்.
ஓடுதளத்தில் இருந்து எழும்பி, விண்ணில் பயணிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே MH370 விமானம் தொடர்பை இழந்தது. விமானம் எங்கே பயணித்துக்கொண்டுள்ளது என்பதைச் சுத்தமாகக் கண்காணிக்க முடியவில்லை. விமானிகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
உடனடியாக இரவு பகலாகத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இருந்தபோதும் விமானம் என்ன ஆனது என்பதை மட்டும் தெரியவில்லை. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
விமானங்களின் பாகங்களைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், சில பாகங்களைத் தவிர வேறு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக, விமானத்துறை வரலாற்றில் இதுவரை அவிழ்க்க முடியாத மர்மமாக, மலேசிய விமான விபத்து இருந்து வருகிறது. இது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் உள்ள கருந்துளையில் சிக்கி மாயமாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் குறிப்பிடுவது வானில் உள்ள கருந்துளைகளை அல்ல. கடலுக்கு அடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை.
இது குறித்து டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆராய்ச்சியாளரான டாக்டர் வின்சென்ட் லைன் மிக விரிவான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் பினாங்கு தீா்க்கரேகை பகுதியில் கடல் பரப்புக்குக் கீழே மிக ஆழத்தில் கருந்துளை ஒன்று உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது செங்குத்தான சரிவுகளையும், முகடுகளையும், வண்டல் நிறைந்தும் உள்ளதாகவும், பார்ப்பதற்கு மலைத் தொடர் போல் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். நீருக்கடியில் உள்ள இந்த கருந்துளையில் மலேசிய விமானம் சிக்கியிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக டாக்டர் வின்சென்ட் லைன் கருதுகிறார். கோலாலம்பூருக்கும் வியட்நாமுக்கும் இடையே சுமார் 20,000 அடி கடல் ஆழத்தில் உள்ள இந்த பகுதியை சோனார் கருவி மூலம்கூட கண்டறிய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் வின்சென்ட் லைன் இந்த யூகம், மிகவும் சுவாரஸ்யாக இருந்தாலும், சாத்தியமில்லாத ஒன்று எனச் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மறு தரப்பினரோ, குறிப்பிட்ட அந்த இடத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால், விமானத்தைத் தேடும் பணியை மலேசிய அரசு 2017ம் ஆண்டே முற்றிலுமாக நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.