ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய சிபிசிஐடி மனுவை நெல்லை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியரான கவின் செல்வ கணேஷ் என்பவர் கடந்த 27ஆம் தேதி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கவின் காதலியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் உதவி ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 30ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகுமாரி வரும் 15ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கில் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், சர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனைக் காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை கூடுதல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
காவல்துறையின் விசாரணைக்கு சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.