கோவையில் பாதுகாப்பில்லாத கிணறுகளைக் கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயத் தோட்ட கிணற்றில் கடந்த 1ஆம் தேதி 22 வயது ஆண் யானை தவறி விழுந்து உயிரிழந்தது.
வனவிலங்குகள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் திறந்த மற்றும் பயன்படுத்தப்படாத கிணறுகள் அடையாளம் காணப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகள் குறித்து தோட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுப் பாதுகாப்பான கிணறாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதுபோன்ற கிணறுகளைக் கணக்கிட்டு மாவட்ட வனத்துறைக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.