அமெரிக்க நாட்டின் விசாக்களை பெற இனி 13 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
AMERICA FIRST என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்துள்ள அதிபர் ட்ரம்ப், தொடக்கம் முதலே பல்வேறு விஷயங்களில் கெடுபிடி காட்டி வருகிறார். குறிப்பாக, விசா நடைமுறைகளில் அவர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தற்போது, அவர் கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
அமெரிக்காவுக்குத் தற்காலிகமாகப் பயணம் செய்பவர்கள், இனி 13 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்பதுதான், அந்த புதிய அறிவிப்பு. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2023ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்தவர்களில் பலர், விசா காலம் முடிவடைந்த நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தது. எனவே, இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இந்த டெபாசிட் நடைமுறையை ட்ரம்ப் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வர்த்தகம், சொத்துக்கள் வாங்குவது, விற்பது உள்ளிட்ட வணிக காரணங்களுக்காக அமெரிக்கா செல்பவர்கள் B-1 விசா வாங்க வேண்டும். அதேபோல, சுற்றுலா, யாரையேனும் சந்திப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்பவர்கள் பி2 விசா பெற வேண்டும். இந்த 2 விசாக்களை பெறுவதற்குத்தான் தற்போது டெபாசிட் செலுத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விசா காலத்தைத் தாண்டி சட்டவிரோதமாகப் பலர் தங்குவதை, இந்த புதிய நடைமுறை தடுக்கும் என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்த மாதம் முதலே அமலுக்கு வரும் எனவும், அடுத்தாண்டு ஆகஸ்டு 5ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இந்தியா இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டால், அது அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களை வெகுவாக பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. 13 லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை. அத்தனை பெரிய தொகையைச் செலுத்தினால் மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைய முடியும் எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டே இந்த திட்டம் முன்மொழியப்பட்டபோதும், பைடன் அரசு இதனைச் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.