பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மதம் மாறிய பெண் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடலை கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்ய முற்பட்டதால் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய செல்வகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைக் கண்டித்து இந்து முன்னணியின் மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மக்களுக்காக குரல் கொடுத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நரிக்குறவர் சமுதாயத்தை மதம்மாற்றும் திட்டமிட்ட சதிக்கு தமிழக அரசு துணை போவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக நரிக்குறவர் சமுதாய மக்களை மிரட்டும் நோக்கத்துடன் காவல்துறை செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.