ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதி மற்றும் எழுத்தாளர் மறைமலை இலக்குவனாருக்குத் தமிழக அரசு வீடு ஒதுக்கீடு செய்திருந்தது.
இந்நிலையில் வீட்டு வசதி வாரியத்தில் ஏற்கனவே வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதி இல்லை எனக் கூறி, அந்த வீடு ஒதுக்கீட்டைத் தமிழக அரசு ரத்து செய்தது.
இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இருவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஜோதி ராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தும், மேல்முறையீட்டு மனுவுக்கு எழுத்தாளர்கள் தரப்பு பதில் அளிக்கும்படியும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.