மதுரை மாநகரில் மிகக்குறைந்த அளவில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகளால் பள்ளி செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி அபாயகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விபத்துகள் அரங்கேறுவதற்கு முன்பாக பள்ளி நேரங்களில் மட்டுமாவது கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாநகரில் ஆர் சி மேல்நிலைப்பள்ளி, தியாகராஜா ஆண்கள் மாடல் பள்ளி, நிர்மலா பெண்கள் பள்ளி என ஏராளமான அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளுக்கு மதுரை மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பேருந்தில் வந்து படித்துவிட்டு தினசரி வீடு திரும்புகின்றனர்.
இலவச பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்திப் பயணிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.
கதவுகள் இல்லாத அரசுப்பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் அவ்வப்போது விழுந்து காயம் ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் அரங்கேறுவது தொடர்கதையாகி வருகிறது. மதுரை மாநகரில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமெனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பள்ளிக்குக் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதாலே ஆபத்து எனத் தெரிந்தும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயணிப்பதால் மற்ற பணிகளுக்காகப் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய இடையூறுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விபத்து நடைபெற்ற பின்னர் காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதலும், இழப்பீடும் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தமிழக அரசு, அந்த விபத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து முன்கூட்டியே கூடுதல் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.