டெல்லியில் சுதந்திர வாரம் கொண்டாடத் தொடங்கிய நிலையில், தேசப் பிரிவினையால் பஞ்சாப்,சிந்து, வங்காளம்,பலுசிஸ்தான்,காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இந்துக்கள் படுகொலைகள் அரங்கேறின. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
காந்தி வருகிறார் என்ற செய்தி வந்தவுடன், கொல்கத்தாவுக்கு வடக்கே உள்ள அமைந்துள்ள ஜோடேபூர் ஆசிரமம் பரபரப்பாக இருந்தது. ஆசிரமத்துக்கு வந்த காந்தி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி,வங்காளத்தில், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் முஸ்லீம்களுக்கு எந்த ஒடுக்கு முறையும் இல்லை என்பதை உறுதி செய்யவே நவகாளிக்குச் செல்லப் போவதாக அறிவித்தார்.
அதே நேரம் மந்திர் மார்க்கில் அமைந்துள்ள இந்து மகாசபா பவனும் பரபரப்பாக இருந்தது. விநாயக தாமோதர சாவர்க்கர் தலைமையில் இந்து மகா சபையின் மத்தியக் குழுக் கூட்டம் காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முஸ்லீம்களைத் தாஜா செய்யும் காங்கிரஸ் கொள்கையை எதிர்த்து, காங்கிரசை விட்டு விலகிய பண்டிட் சந்திர சர்மாவும் டாக்டர் கரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து மக்களுக்கும் பிளவுபட்ட இந்துஸ்தானத்தில் சம உரிமை கிடைக்கும் நிலையில்,பாகிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் எனவே, இந்துஸ்தானத்தில் தங்கியிருக்க விரும்பும் முஸ்லீம்களுக்கு சம உரிமை கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப் பட்டது.
இந்தி மொழி பேசாத மாகாணங்களில்,கல்வி, ஊடகம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளுர் மொழிகளில் இருக்கும் என்றும், தேசிய மொழியாக இந்தி,நிர்வாக மற்றும் நீதி அமைப்பில் ஏற்றுக் கொள்ளப் படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும்,அனைத்து குடி மக்களுக்கும் ராணுவப் பயிற்சி உட்பட பல கோரிக்கைகளும் இக் கூட்டத்தில் வைக்கப் பட்டன.
இதேநேரம் கராச்சியில் தனது பங்களாவில், புதிய இஸ்லாமிய நாட்டுக்கான தேசிய கீதமாக எதை வைப்பது என்ற சிந்தனையில் ஜின்னா இருந்தார். அவருக்கு ஜெகந்நாத் ஆசாத் என்ற கவிஞர் நினைவுக்கு வந்தார்.
லாகூரைச் சேர்ந்த பஞ்சாபி இந்துவான ஜெகந்நாத் ஆசாத் என்ற கவிஞரை வரவழைத்து பாகிஸ்தானின் தேசிய கீதத்தை எழுதச் சொன்னார் ஜின்னா. ஒரு காஃபிர் எழுதிய ‘தரனா-இ – பாகிஸ்தான்’ அந்நாட்டின் தேசிய கீதமாக முடிவு செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் நிஜாம் உஸ்மான் அலி, தனது பிரம்மாண்ட அரண்மனையில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். பாகிஸ்தானின் உதவியை நாடி, திவான் தயாரித்த கடிதத்தில்,உருது மொழியில் கையெழுத்திட்டு ஒரு சிறப்புத் தூதரைக் கராச்சிக்கு அனுப்பிவைத்தார் நிஜாம்.
அமிர்தசரஸ் முழுவதும் வன்முறைகள் கலவரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டிருந்தன. சுமார் 100க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப் பட்டனர். இந்துக்களின் வீடுகளும் கடைகளும் சூறையாடப் பட்டன. பஞ்சாப் மாகாணம் முழுவதும் பத்திரிக்கை தணிக்கை அமல்படுத்தப் பட்டது.
டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். சுதந்திர வாரக் கொண்டாட்டம் தொடங்கி இருந்தது. மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நேரு,படேல் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.
அதேநேரம், நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்ஸின் மஹால் மூத்த பிரச்சாரகர்களும் சங்கத்தின் அலுவலர்களும் கூடியிருந்தனர். பிரிக்கப்படாத பாரதத்தின் வரைப்படம் அவர்களின் முன் இருந்தது. தேசம் பிரிக்கப்படவுள்ளது. பிரிவினை கோட்டுக்கு அப்பால் உள்ள இந்துக்களையும், சீக்கியர்களையும் எவ்வாறு பத்திரமாக மீட்டு பாரதத்துக்கு அழைத்து வருவது என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.