சர்வதேச நாணய நிதியமான IMF-மிடமிருந்து 8,560 கோடி ரூபாய் கடன் பெற்ற பாகிஸ்தான், ஒப்புக்கொண்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாரதத்தை இரண்டாகப் பிரித்து,இஸ்லாமிய நாடாக உருவான பாகிஸ்தான், 1958ஆம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைக் கடனாகப் பெற்றுள்ளது. IMF என்ற சர்வதேச நாணய நிதியத்துக்குக் கடன் கேட்டுச் செல்வது என்பது ICU-என்ற தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதாகும்.
ஒரு நோயாளி 25 முறை ICU-வுக்குச் சென்றால், அவன் பிழைப்பதற்கான சாத்திய கூறு மிகக் குறைவு என்பது உண்மை. சொல்லப்போனால் ஒரு ஜனநாயக கட்டமைப்பே இல்லாத பாகிஸ்தானில் மக்கள் பிரச்சனைகளும் பொருளாதார சவால்களும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.
பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த நேரத்தில், இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி, சர்வதேச நாணய நிதியம் IMF, பாகிஸ்தானுக்குக் கடந்த மே மாதம் கடன் வழங்கியது. சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் பாகிஸ்தானின் மோசமான கடந்த கால வரலாற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
மேலும், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை, பாகிஸ்தான் அரசு, எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் மடைமாற்றம் செய்யப்படுவதாக இந்தியா குற்றம் சாட்டியது.
பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்கும் போதே,ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன்,கூடுதலாக 11 நிபந்தனைகளை IMF விதித்திருந்தது. அத்தனை நிபந்தனைகளையும் நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதி அளித்து கடன் பெற்ற பாகிஸ்தான் மூன்று நிபந்தனைகளைக் கூட நிறைவேற்ற வில்லை.
அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, பாகிஸ்தானால் 1.2 டிரில்லியன் அளவுக்குச் சேமிக்க முடியவில்லை. மேலும், மத்திய வருவாய் வாரியத்தால் (FBR) மொத்த வருவாய் இலக்கான 12.3 டிரில்லியனையும் அடைய முடியவில்லை. சில்லறை வணிகர்களிடமிருந்து வரி வசூலிக்கத் தொடங்கப்பட்ட ‘தாஜிர் தோஸ்த் திட்டத்தின்’ கீழ் 50 பில்லியன் இலக்கையும் பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை.
பாகிஸ்தான் தனது முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து அடுத்த பொருளாதார நெருக்கடிக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.