அமெரிக்காவின் தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கான ஒரு வழியாக உலக நாடுகள் மீது ட்ரம்ப் நடத்தும் வர்த்தகப் போரில் ட்ரம்ப் வெற்றி பெற்றாரா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலையே அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ட்ரம்பின் பொருளாதார கொள்கைக்குக் குறைக்கப்பட்ட வரிவிதிப்பு, வர்த்தக பற்றாக்குறையைச் சமநிலைப்படுத்துதல், கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் வரி கட்டணங்கள் ஆகியவை நான்கு முக்கிய தூண்களாக உள்ளன. மீண்டும் அதிபரானதிலிருந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்ரோஷமான முறையில் வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். குறிப்பாக, ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ள நாடுகள் மீது அதிகமான வரிகளைக் கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்கா மக்கள் மீண்டும் பணக்காரர்களாக்குவதற்காக இந்த வரி விதிப்பு என்று ட்ரம்ப் சொன்னாலும், உண்மையில் அமெரிக்கப் பொருளாதார இயக்கவியல் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதிலிருந்து பெறும் வருமானம், அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்வதை விட அதிகமாக இருப்பது ட்ரம்பின் கண்களை உறுத்துகிறது.
இந்தியா, சீனா போன்ற நாடுகளின் இந்த வர்த்தக பற்றாக்குறை அந்த நாடுகளுக்குச் சாதகமாக இருப்பதால் அதைச் சரிக்கட்ட வரி விதிப்பை ஒரு முரட்டு ஆயுதமாக ட்ரம்ப் பயன்படுத்துகிறார்.
நீதிமன்றங்கள் தனது வரி கொள்கையை ரத்து செய்யக்கூடிய அபாயத்தையும் அறிந்துள்ள ட்ரம்ப், முன்னதாகவே, “அமெரிக்காவின் மகத்துவத்தைத் தடுக்கக்கூடிய ஒரே விஷயம், நம் நாடு தோல்வியடைவதைக் காண விரும்பும் ஒரு தீவிர இடமாக நீதிமன்றம் இருக்கும்!” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதுவரை, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பிரிட்டன், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப் பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 90 நாட்களில் 90 ஒப்பந்தங்கள் என்ற வெள்ளை மாளிகையின் அறிவிப்பு பொய்யாகி இருக்கிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்,பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதித்துள்ளார்.
காலனித்துவ கொள்கையை குளோபல் சவுத் நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் அரசு பின்பற்றுவதாகவும், அதன் மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. வளர்ந்து வரும் உலக ஒழுங்கில் தனது ஆதிக்கம் குறைந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்கா, சர்வதேச அளவில் தனித்தன்மையைப் பின்பற்றும் நாடுகள் மீது அரசியல் காரணத்திற்காகப் பொருளாதார நெருக்கடியைக் கொடுக்கிறது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனாலும், அமெரிக்க இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் வரி விதிப்பு, பொருட்களின் விலை உயர்வுக்கும், நாட்டின் வளர்ச்சி குறைவதற்கும் வழிவகுக்கும் என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ட்ரம்ப் உருவாக்கியுள்ள நிச்சயமற்ற பொருளாதாரத்துக்கான விலையை அமெரிக்கர்கள் ஏற்கனவே செலுத்தத் தொடங்கியுள்ளனர்.