தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள தனியார் மதுபான கூடத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இங்கு நகர் பகுதிகளில் ஏற்கனவே நான்கு அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் திருச்செந்தூரில் அரசு அனுமதியுடன் புதிதாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில், நவீன தனியார் மதுபான கூடம் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாணவர் இயக்கத்தினர், உள்ளூர்வாசிகள், பக்தர்கள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இயங்கிவரும் 4 மதுபானக் கடைகளால் பாத யாத்திரையாக வரும் முருக பக்தர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனிடையே புதியதாக மேலும் ஒரு மதுபானக் கடை திறக்கப்பட்டால் விபத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
புதியதாகத் திறக்கப்படவுள்ள தனியார் மதுபான கூடத்தின் அருகே கல்லூரி ஒன்றும் இயங்கி வருவதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.