மதுரை மேலூர் அருகே உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடித் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. விழாவின் 9ம் நாள் நிகழ்வாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
முன்னதாக கோயிலில் வைத்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள், சுவாமியை பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர்.
இதனையடுத்து சுந்தரவல்லி தாயார் யானை வாகனத்தில் முன்செல்ல, 60 அடி உயர தேரில் சுந்தரராஜ பெருமாள், நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். சண்டை மேளம், நாதஸ்வரம் என மேளதாளத்துடன் நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.