நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோத்தகிரி அருகேயுள்ள பழங்குடியின கிராமங்களில் சீசன் காரணமாக பலா மரங்களில் பலாப் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. பலா பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இந்த கிராமங்கள் அருகே முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், வாகப்பனை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காரமடை, பணி நிமித்தமாக நேற்று கோத்தகிரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தனது கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், அவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள குறுகிய மண்பாதை வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த காட்டு யானை காரமடையை தாக்கி தூக்கி வீசியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் மற்றும் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.