கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தையைக் கடத்தி செல்ல முயன்ற பெண்ணை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் சரவணன் – திவ்யா தம்பதியினருக்குக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
திவ்யாவுடன் அவரது மாமியார் தங்கம்மாள் இருந்த நிலையில், மருத்துவமனையில் சுற்றித்திரிந்த பெண், அதிகாலை 3 மணியளவில் திவ்யாவின் குழந்தையை கடத்திக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.
அப்போது தங்கம்மா கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டனர். தொடர்ந்து குழந்தையை கடத்திய பெண்ணிற்குத் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
இதையடுத்து குழந்தையைக் கடத்த முயன்ற பெண்ணை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதனிடையே விசாரிக்காமல் போலீசார் அழைத்துச் சென்றதால் மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.