வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகையில் தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை முழுமையாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ், தமிழ் என முழங்கும் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் இன்றளவும் ஆங்கிலத்தில் தான் வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் வைக்கப்படும் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் மட்டுமே வைக்க வேண்டுமெனத் தமிழ் ஆர்வலர்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டியது கட்டாயம் என அறிவித்த தமிழக அரசு, அதற்கான எந்தவித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது .
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின் படி ஒவ்வொரு வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளால் இன்றளவும் அனைத்து பெயர்ப்பலகைகளும் ஆங்கிலத்திலேயே காட்சியளிக்கின்றன. பெயரளவிற்காக மட்டுமே ஒரு ஓரத்தில் தமிழில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்
தமிழுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறும் தமிழக அரசும், அதன் முதலமைச்சரும் தமிழ் பலகையை வைக்க முடியவில்லையா என்ற விமர்சனம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.
தமிழ்வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து அவ்வப்போது ஆய்வு நடத்துவதோடு, தமிழில் பெயர் பலகையை வைக்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசின் உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.