மதுரையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தினால் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வார வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையின் நகர் பகுதிகளுக்குள் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளில் ஒன்றான செல்லூர் கண்மாய், வைகையின் வடக்குப்புறம் அமைந்துள்ளது. ஆனையூர், சீலையனேரி, தத்தனேரி மற்றும் எஸ்.ஆலங்குளம் ஆகிய கண்மாய்களின் வரத்துக் கால்வாய்களின் மூலமாகவும் மழைநீர் மூலமாகவும் செல்லூர் கண்மாய் நீரை பெற்று வருகிறது.
அதோடு சாத்தையாறு அணை மற்றும் கூடல் நகர் பகுதிகளில் இருந்து வரக்கூடிய நீரும், சேரும் கடைமடையாக இந்த செல்லூர் கண்மாய் திகழ்கிறது. இத்தகைய கண்மாய் முறையாகத் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பின் காரணமாகவும் சுருங்கி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
230 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லூர் கண்மாயின் மூலம் சுமார் 80 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் காரணத்தினாலும், கண்மாய் முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரையாலும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
செல்லூர் கண்மாயை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாததன் விளைவே கடந்த ஆண்டு பெய்த பெருமழையின் போது குடியிருப்புகளுக்குள் மழைநீர் புக காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செல்லூர் கண்மாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையை அகற்றுவதோடு, கண்மாய் முழுவதையும் தூர்வார வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ள நிலையில், அலட்சியப் போக்குடன் செயல்படும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தால் கண்மாயில் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெயரளவிற்குத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு ஒதுக்கும் தொகையை முறையாகப் பயன்படுத்தி மதுரையின் நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயை முழுமையாகத் தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.