கிருஷ்ண ஜெயந்தி நெருங்கும் நிலையில் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் சிலைகளின் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது. கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் பூம்புகார் கண்காட்சி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமே நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த தினத்தைக் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியைச் சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக கிருஷ்ணர் பொம்மைகள், சிலைகள் மற்றும் பூஜைக்கான பொருட்களும் வாங்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிருஷ்ண ஜெயந்தியின் மூலம் பொதுமக்களும், கைவினை கலைஞர்களும் பயன்பெறும் வகையில் சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசன திருவிழா எனும் பெயரில் கண்காட்சி தொடங்கியுள்ளது.
16ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் கிருஷ்ணரின் உருவம் கொண்ட பொம்மைகள், பஞ்ச லோகங்கள், பித்தளை, கருப்பு உலோகச் சிலைகள் மற்றும் ஓவியங்கள் என எண்ணற்ற சிற்பங்கள் பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு அடி முதல் மூன்று அடி வரை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகளுக்கு பத்து சதவிகிதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளின் விலை குறைந்த பட்சமாக 130 ரூபாயாகவும் அதிகபட்சமாக 10 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் அதே வேளையில் சிலைகள் மற்றும் சிற்பங்களை வடிவமைக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் நடைபெறும் இந்த பூம்புகார் கண்காட்சி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.