தமிழக அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வரும் விற்பனையால் சிலை வடிவமைக்கும் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளன.
விநாயகப் பெருமானின் தெய்வீகக் குணங்களைக் கொண்டாடும் விநாயகர் சதூர்த்தி ஆண்டுதோறும் தமிழக மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், மூன்று தினங்களுக்குப் பின்னர் அவற்றை எடுத்துச் சென்று தண்ணீரில் கரைப்பதும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க விநாயக சதுர்த்தி பண்டிகை வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணி திருச்சி மாவட்டம் திருவானைக்காவல், கொண்டையம்பட்டி பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளின் விற்பனை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகச் சிலை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
50 ரூபாயில் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. புதிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதியில்லை, ஏற்கனவே வைத்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும், பெரிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடக்கூடாது எனக் கட்டுப்பாடுகளை ஆண்டுக்கு ஆண்டு அடுக்கிக் கொண்டே போவதாகத் தமிழக அரசின் மீது புகார் எழுந்துள்ளது.
இது போன்ற கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைவால் அதன் விற்பனையும் சரியத் தொடங்கியுள்ளது
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சிலை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிலைகளை வாங்க போதுமான ஆர்வம் இல்லாத காரணத்தினால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருப்பதாகச் சிலை வடிவமைப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு நஷ்டத்தைச் சந்திக்கும் சிலை வடிவமைப்பாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோடு அவர்களுக்கு மானியம் வழங்கவும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.