சென்னை ரிப்பன் மாளிகையின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை கவுன்சிலர்கள் போன் செய்து மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையின் வெளியே 9-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தேர்தல் வாக்குறுதியின்படி முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த சுரேஷ், கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டுவதாகவும் கூறினார்.
தூய்மை பணியாளர்களுக்கு 23 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குப் பதிலாக 16 ஆயிரம் ரூபாய் தான் தரப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கௌரவப்படுத்துவதாகக் கூறுவதைத் தவிர்த்து, பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.