தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
பதவியேற்ற நாள் முதலே, எப்படியாவது நோபல் பரிசை வாங்கி விட வேண்டும் என்பதில் ட்ரம்ப் குறியாக உள்ளார். அதற்கான காய்களையும் அவர் ஆரம்பம் முதலே நகர்த்தி வருகிறார்.
அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமாவிற்கு 2009ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அவரது ஆட்சிக்காலத்தில் ஏராளமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், 2017ம் ஆண்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகளை முழுமையாக விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். அமெரிக்காவின் எதிரி நாடாகக் கருதப்பட்ட வடகொரியாவுக்கும் பயணம் மேற்கொண்டு, கிம் ஜாங் உன்னைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாலிபான் ஆட்சியாளர்களையும் சந்தித்து பேசிய அவர், அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையே ஆபிரஹாம் ஒப்பந்தம் ஏற்படவும் காரணமாக இருந்தார். இப்படி, சர்வதேச அளவில் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் எப்படியாவது நோபல் பரிசை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் ட்ரம்ப் உள்ளார். ஆனால், இதற்கு இந்தியா முட்டுக்கட்டையாக உள்ளதாக டிரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நிறுத்தி உலக அமைதிக்கு வழிவகுத்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். குறிப்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தம்மால்தான் முடிவுக்கு வந்ததாகவும், அதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த அணுஆயுத போரை, தான் தடுத்து நிறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஒருமுறை அல்ல, 25 முறைக்கும் மேல் அவர் இவ்வாறு கூறினார்.
ஆனால், இதனை இந்தியா ஏற்கவில்லை. பாகிஸ்தான் மன்றாடியதால்தான் தாக்குதலை நிறுத்தியாக இந்தியா தெளிவாக விளக்கம் அளித்துவிட்டது.
இந்தியா தெரிவித்த இந்த மறுப்பு, ட்ரம்பின் கூற்றின் நம்பகத்தன்மையை உலக அரங்கில் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனை ஒரு அவமானமாகக் கருதும் டிரம்ப், இதன் காரணமாக இந்தியா மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து புவிசார் அரசியல் அறிஞர் யூசுப் உன்ஜாவாலா மேலும் சில விஷயங்களைக் கூறுகிறார். ஜூன் மாதம் கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
மாநாட்டை முடித்துவிட்டு வெள்ளை மாளிகைக்கு வரும்படி மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தானின் தலைமை ராணுவ தளபதியான அசீம் முனீரும் அமெரிக்காவில்தான் இருந்தார்.
எனவே, வெள்ளை மாளிகையில் மோடி மற்றும் அசீம் முனீர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கையை அறிவித்து விடலாம் என ட்ரம்ப் கருதினார். ஆனால், மோடி வெள்ளை மாளிகைக்குச் செல்லாததால் ட்ரம்பின் திட்டம் தவிடுபொடியானதாக, யூசுப் உன்ஜாவாலா தெரிவிக்கிறார்.
சரி, உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தி வைத்து நல்ல பெயர் வாங்கலாம் என்றால், அதற்கு ரஷ்யா சம்மதிக்கவில்லை. எனவே, ரஷ்யாவை தனிமைப்படுத்த முடிவெடுத்த ட்ரம்ப், அந்நாட்டுடன் யாரும் வர்த்தக உறவு மேற்கொள்ள கூடாது என வற்புறுத்தினார். ஆனால், அதனையும் இந்தியா ஏற்கவில்லை.
இப்படி, நோபல் பரிசை நோக்கிய தனது பயணத்திற்குத் தடையாக உள்ளதால்தான், இந்தியாவுக்கு ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்ததாக கூறப்படுகிறது. மாறாக, உக்ரைன் போரை நிறுத்தி உலக அமைதியை ஏற்படுத்துவது எல்லாம் அவரின் நோக்கம் இல்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.