இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. ட்ரம்பின் வரி நடவடிக்கை இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவைச் சீர்குலைத்து விடும் என்று அமெரிக்க அதிகாரிகளே எச்சரித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாவது முறை அதிபராகப் பதவி ஏற்ற நாளில் இருந்தே மற்ற நாடுகள் மீது வரத்தகப் போரைத் தொடங்கிய அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது 25 சதவீத வரியை விதித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இறக்குமதி வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை இந்தியா முற்றிலுமாக நிராகரித்தது. அதனையடுத்து, இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அறிவித்து, மொத்தமாக 50 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார்.
சீனா, துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்தியா மீது அதிக வரி விதித்த ட்ரம்ப்பின் நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தச் சூழலில், இந்தியாவின் மீது 50 சதவீத வரி விதிக்கும் ட்ரம்பின் உத்தரவை, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் (Kurt Campbell) கர்ட் கேம்பல் விமர்சித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடியைப் பற்றி ட்ரம்ப் கூறிய கருத்துக்களால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு இந்தியா அடிபணிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான (Gregory Meeks) கிரிகோரி மீக்ஸ் டிரம்பின் அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மையை உறுதிப்படுத்தப் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை எல்லாம் ட்ரம்ப் உடைத்து விட்டார் என்று வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.
இதேபோல், அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (John Bolton) ஜான் போல்டன், ட்ரம்பின் வரிக் கொள்கை, நேர்மாறான விளைவை ஏற்படுத்தும் என்றும், வரும் காலங்களில் இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகத்துக்கான முன்னாள் அமெரிக்க வர்த்தக துணைச் செயலாளரும் மூத்த வெளியுறவுக் கொள்கை நிபுணருமான (Christopher Padilla) கிறிஸ்டோபர் படில்லா, ட்ரம்பின் செய்கையால், இருநாடுகளுக்குமான உறவில் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவை ஒரு இறந்த பொருளாதாரம் என்று ட்ரம்ப் கூறியது தவறானது என்று கூறிய ( Christopher Padilla ) கிறிஸ்டோபர் படில்லா, அமெரிக்கா நம்பகமான நாடா ? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது ட்ரம்பின் 50 சதவீத வரி நடவடிக்கையால், டிரம்ப் தனது நாட்டிலேயே தனது செல்வாக்கை இழந்து வருகிறார் என்பதே நிஜம்.