பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என்றும்,
அதற்கு முன்னர் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, கருத்து கேட்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்குவதற்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், எந்த ஆவணமும் வழங்க முடியாமல் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கும் வாக்காளர்கள், உரிய ஆவணங்களை பெறுவதற்கும் வழி ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தகுதி வாய்ந்த வாக்காளர்கள் விடுபடக்கூடாது என்பதற்காக, விழிப்புணர்வு பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் விடுபடக்கூடாது என்ற நோக்கத்திலும் 246 நாளிதழ்களில் ஹிந்தி மொழியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.