சென்னை விருகம்பாக்கத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் நிலையில் ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வருகின்றனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில், தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய 3 பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடும் நிலையில், சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர். சென்னை விருகம்பாக்கத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சின்னத்திரை நடிகர்கள் வாக்கு செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வாக்களிக்க வந்த சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா, தனக்கு வாக்குரிமை இருந்தும் தன்னை வாக்களிக்க விடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், தனக்கு தொழில் ரீதியாக மட்டுமே ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாக்குரிமை மறுக்கப்பட்டதில் நியாயம் இல்லை எனவும் அவர் கூறினார்.