வார விடுமுறையையொட்டி, உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நீலகிரி மற்றும் உதகையின் இதமான காலநிலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கண்டு ரசிக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தனர்.
குறிப்பாக, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புல்வெளி மைதானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடினர். மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்து, சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு, இயற்கையின் அழகை ரசித்தனர். அங்குள்ள படகு இல்லத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்வதிலும் ஆர்வம் காட்டினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியானது புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. வார விடுமுறையை கொண்டாட தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர்.
பராமரிப்பு பணி காரணமாக படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து பொழுதை கழித்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த கவியருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வார விடுமுறையையொட்டி கவியருவியில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.