மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக மண்டல தலைவரின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி ஆணையர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆளுங்கட்சியைச சேர்ந்த 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேர் ராஜினாமா செய்தனர்.
அதிமுக தொடர்ந்த வழக்கு அடிப்படையில் முறைகேடு வழக்கை, மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், முறைகேட்டில் கைதான சொத்து வரிக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், மேயரின் கணவர் பொன்வசந்த் , திமுக கவுன்சிலர்கள் கஜேந்திரன், லட்சிகாஸ்ரீ, ம.தி.மு.க.,வைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோருக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.
திமுகவில் இருந்த செல்வாக்கால் தன் மனைவிக்குச் சொத்து வரிவிதிப்புக்குழு தலைவர் பதவி கொடுத்ததாகவும், ஏராளமான கடைகள், நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்து 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளதாகவும் கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், மத்திய மண்டல உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் ஆகியோர் பல்வேறு கடைகளுக்கு வரி குறைப்பு செய்துள்ளதாகவும் காளவாசலில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு விதிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் வரியைப் பூஜ்யமாக மாற்ற லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
“சாதாரண கண்ணனாக இருந்த தான், வரி கண்ணனாக” மதுரையில் அழைக்கப்பட்டதன் காரணம்குறித்த பின்னணியையும் வாக்குமூலத்தில் விவரித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த், கண்ணனை தனக்கு தெரியாது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யாராவது, ஏதாவது கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.