இந்தியாவின் வளர்ச்சியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.அதுதொடர்பான முழு விபரங்களை இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், பயணநேரத்தை குறைக்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. விமான நிலையங்கள் விரிவாக்கம், ரயில் நிலையங்கள் புனரமைப்பு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைப்பு என அதற்கான பணிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், 150ஆவது வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பெங்களூரு – பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீமாதா வைஷ்ணவ்தேவி கத்ரி, அஜ்னி – புனே ஆகிய வழித்தடங்களில், 3 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொள்ளவிருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெங்களூருவின் ஆர்.வி.ரோடு முதல் ஓசூர் சாலையில் உள்ள பொம்மசந்திரா வரை 18 புள்ளி 82 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மெட்ரோ வசதி செய்யப்பட்டுள்ளது. சேவையைத் தொடங்கி வைத்த பின், மெட்ரோ ரயிலில் கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் இணைந்து அவர் பயணம் செய்தார்.
அப்போது, ரயிலில் பயணித்த மாணவர்களுடன் சிரித்து பேசி மகிழ்ந்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் புதிய முகத்தை உலகம் பார்த்ததாகவும், பெங்களூருவும், அதன் இளைஞர்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும் மோடி குறிப்பிட்டார்.மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைமூலம் பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாகவும், இந்தியாவின் வலிமை உலகெங்கும் பறைசாற்றப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிவித்த மோடி, எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாத வேகத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என விமர்சித்ததுடன், 50 சதவீத வரியையும் அமெரிக்கா விதித்துள்ள நிலையில், பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.