கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நெல்லை மாவட்ட தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆணவக் கொலை வழக்கில் கடந்த 7-ம் தேதி சிறையில் உள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை காவலில் எடுத்து விசாரணை செய்ய நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்திருந்தது.
நீதிபதி ஹேமா முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் எப்படி அழைத்துச் செல்கிறோமோ அதேபோல மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என சிபிசிஐடி சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்கப்பட்டது.
இதையடுத்து சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி வழங்கி நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.
மேலும், இருவரையும் நாளை மாலை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்ப்படுத்த வேண்டும் என ஆணையிட்டார்.
காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் சுர்ஜித், சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த, சிபிசிஐடி எஸ்.பி. ஜவகர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவலில் எடுக்கப்பட்டுள்ள இருவரிடமும் கவின் கொலைக்கான காரணம், பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் கொலை சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே விசாரணையின்போது சுர்ஜித் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.