சென்னை திருவொற்றியூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், திருவொற்றியூரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. வாலாஜாபேட்டை, ஆற்காடு, திமிரி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வெகு நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதே நேரம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.