முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 115 புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இதனை விசாரித்த சைபர் க்ரைம் போலீசார், அவற்றில் முகாந்திரம் இல்லை எனக் கூறி 115 புகார்களையும் முடித்து வைத்தனர்.
இந்நிலையில் பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் முறையாக விசாரணை நடத்தப்படாமலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், பொன்முடி மீதான புகார்களை முடித்து வைத்த உத்தரவை ரத்து செய்து அதன் மீதான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு விரைவில் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.