ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், இந்தியாவை ஒதுக்கிவிட முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு காணொலி வாயிலாக பேட்டியளித்த மைக்கேல் ரூபின், இந்தியாவின் நலனுக்காகவே பிரதமர் மோடி உறுதியாக செயல்பட்டு வருகிறார் என்றும்,
இந்தியாவை ஒதுக்கிவிட முடியாது என்பதை அமெரிக்க உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மைக்கேல் ரூபின், அதிபர் டிரம்ப் அடிப்படையில் ஒரு தொழிலதிபர் என்பதால், குதிரை பேரத்திற்கு பழகிவிட்டார் என விமர்சித்துள்ளார்.
தமது நிலைப்பாடு, போரை முன்னெடுக்கும் என்பதை அதிபர் டிரம்ப் புரிந்து கொள்ளவில்லை எனக்கூறிய மைக்கேல் ரூபின், அமைதிக்கான நோபல் பரிசு வெல்வதே டிரம்ப்பின் லட்சியமாக உள்ளது என தெரிவித்தார்.
அமெரிக்க மண்ணில் இந்தியாவுக்கு அணு ஆயுத எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மைக்கேல் ரூபின், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், ஒசாமா பின்லேடனை போன்றவர் என விமர்சித்துள்ள மைக்கேல் ரூபின், அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்தபோதே அசிம் முனிர் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.