உலகின் மர்மம் நிறைந்த பகுதியாகப் பெர்முடா முக்கோணம் விளங்கி வருகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களுக்கான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கங்களை அளித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலகில் பல விஷயங்கள் இதுவரை விடை காணப்படாத மர்மமாகவே நீடித்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது? யாருக்கும் தெரியாது.
பெரு பாலைவனத்தில் காணப்படும் பெரிய அளவிலான வடிவங்களை (Nazca Lines) யார் வரைந்தது?. இதுவரை பதிலில்லை. அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் கொள்ளையில் ஈடுபட்ட D.B.Cooper எப்படித் தப்பித்தார்? இன்னும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இப்படி நீளும் மர்மங்களின் பட்டியலில் எப்போதும் முதன்மை இடம் பிடிப்பது, பெர்முடா முக்கோணம். பெர்முடா முக்கோணம் என்பது, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா தீவு, கரீபிய கடலில் உள்ள போர்ட்டோ ரிக்கோ தீவு மற்றும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை இணைக்கிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் எந்த கப்பல் சென்றாலும் காணாமல் போய்விடும். இப்பகுதிக்கு மேலே விமானங்கள் பறந்தால், அவையும் மாயமாகிவிடும். எனவே, மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாகவே பெர்முடா முக்கோணம் இன்று வரை இருந்து வருகிறது.
அங்குத் தீய சக்திகள் உள்ளதாக ஒரு தரப்பினரும், வேற்றுகிரகவாசிகள் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு தரப்பினரும், இல்லை இல்லை இதெல்லாம் கடற்கொள்ளையர்களின் கைவண்ணம் என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், ஆஸ்திரேலிய விஞ்ஞானியான கார்ல் க்ருஸ்ஸெல்னிக்கி (Karl Kruszelnicki) இது குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
எழுத்தாளராகவும், அறிவியல் ஆய்வாளராகவும் விளங்கும் இவர், கணிதம், இயற்பியல், உயிரி மருத்துவ பொறியியல் உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வான் இயற்பியல், கணினி அறிவியல், தத்துவம் உள்ளிட்டவற்றையும் பயின்றுள்ளார். எனவே இவரது கருத்துகள் ஆய்வுலகில் எப்போதும் மதிப்பு மிக்க ஒன்றாக இருந்து வருகின்றன.
தற்போது, பெர்முடா முக்கோணம் குறித்து கருத்து பகிர்ந்துள்ள Kruszelnicki, அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட சம்பவங்கள் எதுவுமே இயற்கைக்கு முரணானவையல்ல எனக் கூறியுள்ளார்.
மனித தவறுகள், தவறான வழியில் செல்லுதல், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பெர்முடா முக்கோண பகுதியில் விபத்துகள் நேரிடுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், பெர்முடா முக்கோண பகுதியில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெர்முடா முக்கோணம் அதிக கடல் திட்டுகளையும், shallow area எனப்படும் குறைந்த ஆழம் கொண்ட பகுதிகளையும் கொண்டுள்ளதாகக் கூறும் Kruszelnicki, இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை ஏற்படும் புயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளதாகத் தெரிவிக்கும் அவர், மனித தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.
கடல் பயணத்தின்போது இடர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பலர் பின்பற்றுவதில்லை எனவும், அதனால் பல அசம்பாவிதங்கள் நேரிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
உண்மை நிலைமை இப்படி இருந்தாலும், அமானுஷ்யம், மர்மம் போன்ற விஷயங்களில் பெரும்பாலான மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அது குறித்த கதைகளை அதிகம் கேட்க அவர்கள் விரும்புகின்றனர். இதனால்தான், பெர்முடா முக்கோணம் குறித்த அமானுஷ்ய கதைகள் இன்றுவரை உயிர்ப்புடன் இருந்து வருவதாக Kruszelnicki கூறுகிறார்.