சேலத்தில் கோஷ்டி மோதலால் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது அக்கட்சியினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சியின் 28வது வார்டு கவுன்சிலரான ஜெயக்குமார், 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை சேலம் மாநகர திமுக செயலாளராகப் பதவி வகித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஜெயக்குமாரிடம் இருந்த செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயக்குமாரை வெளியே வரவழைத்து திமுகவினர் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அவரது மனைவி மற்றும் மகன்கள் ஜெயக்குமாரை வீட்டுக்குள் தள்ளிப் பூட்டியதால் ஜெயக்குமார் உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில், ஜெயக்குமாரை திமுகவினர் கத்தியால் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி கவுன்சிலர் ஜெயக்குமார் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கும், தனது ஆதரவாளர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அமைச்சர் ராஜேந்திரன் தான் காரணம் எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.