திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அருகே கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது.
பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுசேரி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் ஒரு தரப்பினர் வசிக்கும் தெருவில் அம்மன் ஊர்வலம் சென்றதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை போலீசாரும், கோயில் நிர்வாகத்தினரும் தடுத்து நிறுத்திச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், ஒருதரப்பினரைச் சேர்ந்த தேவி என்பவரின் வீடு புகுந்த மற்றொரு தரப்பினர் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் காயமடைந்தனர். மேலும், தேவி மற்றும் அவரது உறவினரிடம் 7 சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளதாகக் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.