மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது.
வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா 2025 கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய சிக்கலான வரி அமைப்பை 50 சதவீதம் எளிமையாக்கும் விதமாக புதிய மசோதா அமைந்துள்ளது. மசோதா தொடர்பாக 31 எம்.பி-க்கள் அடங்கிய தேர்வுக்குழு வழங்கிய பரிந்துரைகளை சேர்த்து, மசோதாவின் புதிய பதிப்பு நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா 2025 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதை தொடர்ந்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா சட்டமாகி அடுத்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.