நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை நடந்தது எப்படி என்பதை, குற்றம்சாட்டுள்ள சுர்ஜித் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கேடிசி நகரில் மாற்ற சமூக பெண்ணை காதலித்ததற்காக ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் மற்றும் தந்தை சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், கைதான இருவரையும் சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி எஸ்.பி ஜவகர் முன்னிலையில் சுர்ஜித் மற்றும் தந்தை சரவணன் ஆகியோரிடம், தனித்தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சுர்ஜித்தை சம்பவ இடமான கேடிசி நகர் பகுதிக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து ஜூலை 27-ம் தேதி கவினை கொலை செய்தது எப்படி என்பதை, சுர்ஜித் சிபிசிஐடி போலீசார் முன் நடித்து காட்டினார்.
அவை அனைத்தையும் சிபிசிஐடி போலீசார் வீடியோ பதிவு செய்துகொண்ட நிலையில், வழக்கில் இந்த வீடியோ முக்கிய ஆவணமாக சேர்க்கப்பட்டுள்ளது.