விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். ஏழைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைத்த அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1926ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, திண்டுக்கல்லில் உள்ள பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். சொந்த ஊரிலேயே 7-ம் வகுப்பு வரை படித்த கிருஷ்ணம்மாள், பிறகு மதுரையில் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த கிருஷ்ணம்மாள் தான் மதுரையின் முதல் பெண் பட்டதாரி. அதுவும், தாழ்த்தப்பட்டோர் பிரிவிலிருந்து தமிழகத்திலேயே பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் கிருஷ்ணம்மாள் பெற்றார்.
1942 ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்திய விடுதலைக்குப் பின், வினோபாபாவே-யின் பூமி தான இயக்கத்தில் சேர்ந்து ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டார்.
நிலமற்ற ஏழை விவசாய மக்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பெற்றுத் தந்ததில், இவரின் உழைப்பு மகத்தானது. அதற்காகவே, உழவனின் நிலவுரிமை இயக்கத்தைத் தொடங்கினார். லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு,ஏழைகளுக்குக் கொடுத்துள்ளார். மேலும்,தாம் தானமாகப் பெற்ற 10000 ஏக்கர் விளை நிலத்தை ஏழைகளுக்கேப் பகிர்ந்து கொடுத்துள்ளார்.
1968-ல் தஞ்சாவூர் கீழ் வெண்மணியில்,பாதிக்கப்பட்ட 74 குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலத்தை அவர்கள் பெயரிலேயே வாங்கிக்கொடுத்தார் கிருஷ்ணம்மாள். எளிமையின் உருவமாக உறுதியின் வடிவமாக,கொண்ட இலட்சியத்துக்காக,தம் வாழ்வை அர்ப்பணித்து அதற்காக உழைத்த கிருஷ்ணம்மாளுக்குப் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் ஆகிய உயர்ந்த விருதுகளை வழங்கி இந்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது. நோபல் பரிசுக்கும் இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.