தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், சினிமா படத்தைப் பார்த்து ரசிக்கும் கொடுங்கோல் முதல்வரின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை அருகே சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் திரங்கா யாத்திரை நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் இருசக்கர வாகன பேரணியை ஆரம்பித்து வைத்து, பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. சந்திப்பில் நிறைவு செய்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி பற்றிப் பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை எனத் தெரிவித்தார்.
ஜனநாயக முறையில் போராடிய தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து 2 நிமிடங்கள் கூட பேசாமல், சினிமா படத்தைப் பார்த்து ரசிக்கும் கொடுங்கோல் முதலமைச்சரின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் அவர் விமர்சித்தார்.
தமிழக அரசு வளர்ச்சி என்ற மாயையைக் காட்டிக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய எல்.முருகன், குஜராத், உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் வளர்ச்சி பின்தங்கி இருக்கிறது எனவும் தெரிவித்தார்.