இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீர மங்கையாகத் தமிழ்நாட்டின் வேலுநாச்சியார் திகழ்கிறார். அவர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1730 ஆம் ஆண்டு பிறந்த வேலு நாச்சியார், சிறு வயதிலேயே குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றார்.
ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்படப் பல மொழிகளிலும் ஆளுமை பெற்றிருந்தார். 16 வயதான போது சிவகங்கை இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்த தம்பதியர் சிவகங்கையை ஆட்சி செய்தனர்.
1773-ஆம் ஆண்டு, ‘காளையார் கோவில் போரில்’ வேலு நாச்சியாரின் கணவர் வீரமரணம் அடைந்தார். வேலு நாச்சியாரையும், அவரது மகளையும், மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்
நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் உடையாள் பெயரிலேயே ஒரு மகளிர் படையை உருவாக்கினார் வேலுநாச்சியார். ஹைதர் அலியின் ராணுவத்தின் துணையுடன் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளை வேலுநாச்சியார் கைப்பற்றினார்.
1781-ல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை வேலுநாச்சியார் அடைந்தார். குயிலி தலைமையில் இருந்த பெண் வீரர்கள், தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக்கொண்டு, வெடிமருந்து கிடங்குக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்.
வேலுநாச்சியார் வீரத்துக்குப் பதிலளிக்க முடியாமல் ஆங்கிலேய படை தோற்றது. முதல் இந்தியச் சுதந்திரப் போருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமையை வேலு நாச்சியார் இதன் மூலம் பெற்றார்.
அடுத்த 10 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியார், தனது மகளிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு 1796 ஆம் ஆண்டு சிவகங்கையில் காலமானார்.