தென்தமிழகத்து, மக்களின் பசிபோக்கி உயிர் காக்கும் ஜீவனாக விளங்குவது முல்லைப் பெரியார் அணை. 1789-ம் ஆண்டு, இந்த அணை கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டியவர், இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரியான முத்து இருளப்ப பிள்ளை.
இராமநாத சமஸ்தானத்தில் திவானாக விளங்கியவர் முத்து இருளப்ப பிள்ளை. தென் தமிழகத்தில் 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் வீடு முழுக்க நிறைந்திருந்தது பட்டினியும் வறுமையும்தான்.
அப்பகுதி மக்களின் ஒரே நீராதாரமாய் இருந்த வைகையிலும் ஆண்டுக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். தண்ணீரைப் பகிர்வதில் சிவகங்கை மற்றும் இராமநாதபுர சமஸ்தானத்துக்கும் தகராறு ஏற்பட்டு மக்களை வாட்டின.
அதேவேளையில் பெரிய அளவில் விவசாயம் இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு, மேற்கு மலையில் உருவான ஆறுகள் மூலம் கடல் வணிகம் கைகொடுத்தது.
மேற்கே உருவாகி வீணாகக் கடலில் கலக்கும் ஆற்றினை கிழக்கே திருப்பி வைகையோடு இணைத்தால் வேளாண்மை பெருகும். அதோடு மக்களின் பசிப்பிணியும் நீங்கும் என்ற யோசனை முத்து இருளப்ப பிள்ளையின் மனதில் உதித்தது.
இதைக் கேட்டவுடன் சேதுபதி மன்னர், முத்து இருளப்ப பிள்ளையோடு ஒரு குழுவினை அனுப்பி முழு விவரங்களை அறிந்துவரச் சொன்னார்.
மனித காலடிகளே படாத மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் உதவியாளர்களோடு சென்ற முத்து இருளப்ப பிள்ளை, சொல்லெண்ணா துயரத்துக்கும், விஷக்கடிகளுக்கும் இடையே, அங்கிருந்த ஆறுகளின் ஊற்றுகளைத் தேடிக் கண்டு பிடித்தார்.
அதன் பிறகு, முல்லை ஆறு,பெரியாறு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு அணைக் கட்டும் திட்டத்தை வகுத்து, அதற்கான கட்டுமானச் சாத்திய கூறுகளையும் பட்டியலிட்டார்.
ஏற்கெனவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்துக்குப் புதிதாக அணைகட்ட போதுமான நிதி இல்லை என்பதால், முத்து இருளப்ப பிள்ளையின் திட்டம் கைவிடப்பட்டது.
மீண்டும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆங்கில ராணுவ பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில், முல்லைப் பெரியார் அணை 1896ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது வரலாறு.