13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் கிளைவழியில் தோன்றிய சிற்றரசு தான் பூழிநாடு. இந்த வம்சத்தில் வந்த பத்தாவது சிற்றரசர் தான் பூலித்தேவர்.
1715 ஆம் ஆண்டில் பிறந்த பூலித்தேவர்,1726-ல் அரியணை ஏறினார். 1755ஆம் ஆண்டு கர்னல் ஹெரான் தலைமையில் பிரிட்டிஷ் படைகள் நெற்கட்டான்சேவல் கோட்டையை முற்றுகையிட்ட போது, அவர்களை விரட்டியடித்து வெற்றி பெற்றார்.
இதனையடுத்து,நடைபெற்ற போரில் முகமது யூசுப்கான் என்ற மருதநாயகத்தை தோற்கடித்தார். திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாப் படையை தோற்கடித்தார்.
கிழக்கிந்திய கம்பனியின் பலம் அறிந்த பூலித்தேவர், அவர்களுக்கு எதிராக, இந்திய அரசுகளின் கூட்டணியை உருவாக்கினார். கிழக்கிந்திய கன்பெனி படைகளுடன் நடந்த 17 போர்களில் பதினைந்தில் பூலித்தேவர் வெற்றி பெற்றார்.
1767ஆம் ஆண்டு மே மாதம், (Colonel Donald) டொனல்டு காம்பெல் தலைமையில், கம்பெனி படைகள் வாசுதேவநல்லூர் கோட்டையைச் சுற்றி வளைத்துத் தாக்கியது.
பீரங்கித் தாக்குதலினால் கோட்டைச் சுவரில் விழுந்த ஓட்டையைக் களிமண்ணும், வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் கிடைக்காத சூழலில் வீரர்கள் தங்கள் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்தனர். ஆயினும் கோட்டை தகர்க்கப்பட்டது.
பூலித்தேவரைக் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்துச் செல்லும் வழியில், சங்கரநயினார் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபட அனுமதி கேட்டார்.
அதன்படி பூலித்தேவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயிலுக்குள் சென்ற பூலித்தேவர் திடீரென்று ஏற்பட்ட புகையில் கைவிலங்குகள் அறுந்து விழ, சிவஜோதியில் ஐக்கியமானார்.
வெள்ளையர்களை எதிர்த்து, வீரத்துடன் போரிட்ட பூலித்தேவர், சிவசொரூபத்தில் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” என்று அழைக்கப் படுகிறார்.