பனிப்பாறை சரிவால் அலாஸ்கா கடற்கரையை 100 அடி உயரச் சுனாமி தாக்கிய நிலையில், இதுபோன்ற பல நிலச்சரிவுகள் மக்கள் வசிக்கும் நகரங்களைத் தாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
அமெரிக்காவின் தென் கிழக்கு அலாஸ்காவில் உள்ள தெற்கு சாயர் பனிப்பாறை அருகே, கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு அப்பகுதியில் ஒரு சக்திவாய்ந்த சுனாமி ஏற்படக் காரணமாக அமைந்தது. சுமார் 100 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள், அலாஸ்கா கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார தீவுகளில் பெரும் சேதத்தை விளைவித்தன.
ஜூனாவில் இருந்து தென் கிழக்கே சுமார் 60 மைல் தொலைவில் உள்ள “எண்டிகாட் ஆர்ம்” பகுதியில் நடந்த இந்த நிகழ்வு, 2015-ம் ஆண்டுக்குப் பின் அலாஸ்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக நூற்றுக்கணக்கான மில்லியன் கியூபிக் மீட்டர் பரப்பளவு கொண்ட பாறைகள் கடற்பரப்பில் சரிந்து, பரந்த அளவிலான கடல் நீரை இடம்பெயர்த்து சுமார் 75 மைல்களுக்கு மேல் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு ஒரு அரிய மற்றும் பயங்கரமான புவியியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான சிறிய அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுனாமி கடற்கரை பகுதியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியிருந்தாலும், உட்கட்டமைப்புகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தேசிய வானிலை சேவை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமவெளியின் மேற்பரப்பில் மண் சிதைவால் ஏற்படும் பொதுவான நிலச்சரிவுகளைப் போல் அல்லாமல், இந்த நிகழ்வில் பரந்த பாறைகள் சரிந்து அலை நீருடன் மோதியுள்ளன. ஏற்கனவே அலாஸ்கா மாகாணத்தில் ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமிக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்திருந்த நிலையில், தற்போது பெரும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த சுனாமி, இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்துகளுக்கான சமிக்ஞை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எதிர்கால ஆபத்துகளைக் கண்டறியும் ஆய்வுகளை மேம்படுத்த இது உதவும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது மக்கள் தொகை குறைந்த தொலைதூர பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருந்தாலும், வருங்காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கடற்கரை நகரங்களிலும் இதுபோன்ற நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.