திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்க உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர்! நிறைவேற்றப்படாத திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” என்ற கேள்வித் தொடரை எனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கவிருக்கிறேன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என மார்தட்டும் ஸ்டாலின் மறந்து போன முக்கியமான 100 தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 12 நாட்களாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறி அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களின் மீது இரவோடு இரவாக அடக்குமுறையை ஏவியுள்ள திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நீங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொடுத்த வாக்குறுதியைத் தானே நிறைவேற்றக் கேட்கிறோம் என்ற கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாவு அப்படி ஒரு வாக்குறுதியைத் திமுக கொடுக்கவேயில்லை என நாகூசாமல் பதிலளித்திருக்கிறார்.
ஆகவே, இத்தொடரின் பிள்ளையார் சுழியாக, நம் நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்த அந்த மக்களின் வாக்குகளைப் பெற்றிட அளிக்கப்பட்ட, இன்று வரை நிரைவேற்றப்படாத ஒரு வாக்குறுதியை முன்வைத்து தொடங்குவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதோ திமுக-வின் தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதி எண். 285! இதை அதிக அளவில் மக்களிடையே எடுத்துரைக்க பாஜகதொண்டர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! விரைவில் மற்றொரு காற்றில் பறந்த வாக்குறுதியோடு உங்களை சந்திக்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.